வங்கி மோசடி மன்னன் நிரவ்மோடியின் காவல் நீட்டிப்பு -லண்டன் நீதிமன்றம் உத்தரவு

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின்  காவல் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வாங்கி  விட்டு  இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார் வைர வியாபாரி நிரவ் மோடி.இந்த மோசடி தொடர்பாக  நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது.
அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்தனர். இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய  வாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்தது.அவர் லண்டனில் உள்ள வான்ஸ்ட்வார்த் (Wandsworth prison) சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் முறையில் நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார்.நிரவ் மோடியின் நீதிமன்ற காவலை,  செப்டம்பர் 19 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி டன்வீர்  இக்ராம் ( judge Tanweer Ikram ) ஆணையிட்டார். மேலும்  நிரவ் மோடியை நாடு கடத்துவது குறித்த வழக்கின் விசாரணை 2020 ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி தொடங்கும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.