இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த சுமார் 60 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், முதலமைச்சர் முக ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் 2வது நாளாக இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், I.N.D.I.A கூட்டணியின் பலத்தைவிட, ‘இந்தியா’ என்ற பெயரே பாஜக கட்சிக்குப் பயத்தை உண்டாக்கியுள்ளது. அதனால்தான், நம் கூட்டணியைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையே பாஜகவினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பாஜக ஆட்சியை வீழ்த்தி மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் அரசை ஒன்றியத்தில் அமைப்பதே I.N.D.I.A கூட்டணியின் நோக்கம். இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாக பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்தாண்டு இந்தியாவுக்கான ஒளிமயமான ஆண்டாக அமையவும், இப்போதே எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எதேச்சதிகார ஆட்சி முடிந்த மக்களாட்சி மலர தேவையான கொள்கையின் மூலம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். இந்தியா கூட்டணிக்கு ஜனநாயகத்தை மலர செய்யும் கொள்கைகளே தலைமை தாங்கும். இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவதே என்ற ஒற்றை இலக்கின் அடிப்படையில் தேவைகளை இந்தியா கூட்டணி சந்தித்து வருகிறது.
இந்தியாவை காக்கப்போகும் இந்தியா கூட்டணி ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும் செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் ஒரே கூட்டத்தில் பிரிந்துவிடுவார்கள் என்று பாஜக நினைத்தது. வெற்றி பாதையில் இந்தியா கூட்டணி பயணித்து வருகிறது என்பதன் அடையாளமே 3-ஆவது ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பாஜகவை ஆட்சியை வீழ்த்தி மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் அரசை அமைப்பதே இந்தியா கூட்டணியின் முழுமுதல் நோக்கம் எனவும் தெரிவித்தார்.