நேபாளத்தில் பயங்கர வெள்ளம்! 105 இந்தியர்கள் உட்பட 384 பேர் மாயம்... 8 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 பேர் நேபாளத்தின் திமுர் பகுதியில் பாதுகாப்புப்படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Hero Image

நேபாளம் : நேரிட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், உட்பட 384 பேர் மாயமாகியுள்ளனர். தீபெத் எல்லையையொட்டி அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் புதன்கிழமை காலை 9 மணியளவில் போடே கோசி (Bhote Koshi) ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்த பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாள சுற்றுலா வாரியத்தின் தற்காலிகப் பட்டியலின்படி, மொத்தம் 384 பயணிகள் மாயமாகியுள்ளனர். இதில் 105 பேர் இந்தியர்கள் ஆவர். மற்றவர்கள் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா, மலேசியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக திபெத் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தியப் புனிதப் பயணிகள் என அஞ்சப்படுகிறது.

உள்ளூர் வானிலை ஆய்வு மையத்தின்படி, ரசுவா பகுதியில் பெய்த மழையினால் இந்த வெள்ளம் ஏற்படவில்லை. திபெத் பகுதியில் பனிப்பாறை ஏரி உடைந்ததால் (GLOF) அல்லது நிலச்சரிவு ஏற்பட்டு ஆறு அடைபட்டுப் பின் உடைந்ததால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த வெள்ளத்தில் வீடுகள், பாலங்கள், வாகனங்கள் மற்றும் சுங்கச்சாவடி வளாகங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், சுமார் 354 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட 8 நீர்மின் திட்டங்களும், கட்டுமானத்தில் இருந்த 5 திட்டங்களும் சேதமடைந்துள்ளன. இதனால் நேபாளம் - திபெத் இடையேயான முக்கிய வர்த்தகப் பாதை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இராணுவம், ஆயுதப் படை மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிக்காக 14 ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும், நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த 50 பேர் சிக்கித்தவிக்கும் செய்தியும் வெளியாகி இருக்கிறது. காத்மாண்டுவில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் திமுர் பகுதியில் உள்ள பாதுகாப்புப்படை முகாமில் 50 பேரும் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்கள் எனத் தகவல்களும் வெளியாகியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் அவசர உதவிக்கு 1234, 1144 ஆகிய எண்களையோ அல்லது சுற்றுலாப் போலீசாரை 9851289445 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.