“நான் வந்துட்டு இருக்கேன்”..மின்னல் வேகத்தில் நகரும் ஃபெஞ்சல் புயல்!
சென்னைக்கு மிக அருகில் 250 கி.மீ. தொலைவில் புயல் தற்போது நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்பில் தகவலை தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலானது நாளை (நவம்பர் 30) புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கவுள்ளது என முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
புயல் கரையை கடக்கும் போது வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அதே சமயம், ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த புயல் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அத்துடன் புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த சூழலில், புயல் வேகம் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் கொடுத்த தகவலில் தெரிவித்திருக்கிறது. அதன்படி, முன்னதாக, மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்த ஃபெஞ்சல் புயல் இப்போது 15 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாகப்பட்டினத்திற்கு 240.கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு 230.கி.மீ தொலைவிலும் , சென்னைக்கு மிக அருகில் 250 கி.மீ. தொலைவில் புயல் தற்போது நகர்ந்து வருகிறது எனவும் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.