சென்னை : கமலாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்துப் பேசிய அநாகரீகமான கருத்துக்கள் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ள சர்ச்சையாக வெடித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, முதலமைச்சர் விஜய் அவர்கள் திமுக அரசை விமர்சிக்கும் வகையில், "உங்கள் அப்பாவை எங்க, இங்கே காணோம்" என்பது போல கிண்டலாகப் பேசி விவாதம் ஏற்படுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த ஜூன் 25, 2026 அன்று திருவாரூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "அப்பாவை அங்கு தேடாதீர்கள்; நான் மக்கள் மனதில் இருக்கிறேன்" என்று பதிலளித்திருந்தார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த விவகாரத்தில் எல்லை மீறிப் பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதைக் குறிப்பிடும் விதமாக, "சட்டப்பேரவையில் அப்பா எங்கே என்று தேடினால் எப்படித் தெரியும்? வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யாருன்னு சொல்லுவாங்க" என்று மிகவும் அநாகரீகமாகவும் விமர்சித்துப் பேசியுள்ளார். முதலமைச்சரின் தாயாரைக் குறிப்பிடும் வகையில் அவர் பேசிய இந்த வார்த்தைகள் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்குத் த.வெ.க தரப்பிலிருந்து உடனடியாகக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பதிலடி கொடுத்துப் பேசுகையில்"நயினார் நாகேந்திரன் தன் இயலாமையின் வெளிப்பாடாகவே இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பேசி வருகிறார்.
"எங்களின் அரசியல் ரீதியான செயல்கள் மற்றும் மக்கள் பணிகளின் மூலமே நாங்கள் இதற்குப் பதிலளிப்போம். இதுபோன்ற மட்டமான அரசியலைச் செய்யும் அவருக்கு எங்களது வாழ்த்துகள்" என்று ஆவேசமாகக் கூறினார்.
