55 கி.மீ வேகத்தில் காற்று.. நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!
சென்னை: திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மே 20ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடலில் அதிகபட்சமாக காற்று வீசக்கூடும் என்பதால், நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை செய்தியின்படி, இன்று (16.05.2024) முதல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 45 கி.மீ வரை அதிகபட்சமாக 55 கி.மீ வரை வீசக்கூடும் என்றும், கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்” என தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (16.05.2024) கோடை மழை தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுள்ளது.