கனமழை எதிரொலி : “பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம்”..மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தல்!
சென்னை அரும்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ நிலையங்களில் பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 நாட்களாகமையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக உருவாகி இருக்கிறது. இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை புயல் கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயலின் காரணமாக நாளை சென்னை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கனமழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கையை எடுத்து வரும் நிலையில், மெட்ரோ நிறுவனமும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து சென்னை அரும்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ நிலையங்களில் பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மெட்ரோ நிர்வாகம் கூறியதாவது ” 29-11-2024 (மாலை முதல்) முதல் 30-11-2024 வரை (தேதிகளில்) தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள (செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் அரும்பாக்கம்) ஆகிய மெட்ரோ நிலைய வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மழைக்காலம் முடிந்த பிறகு வானிலை அறிவித்த பிறகு வாகனம் நிறுத்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிடப்படும்” எனவும் மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு ஏற்பட்ட புயலின் போது கனமழையில் தண்ணீர் தேங்கியதை கருத்தில் கொண்டு தற்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.