கொரோனவை எதிர்த்து நடந்த உணவுதிருவிழா.. வழக்கத்தை விட அதிகரித்த விற்பனை!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்பொழுது இந்தியாவிலும் பரவியுள்ளது. இதானால் 126 பேர் பாதிப்படைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக மதுரையில் உள்ள “தமிழா” என்ற உணவகத்தில் மார்ச் 15 மற்றும் 16-ம் தேதி உணவு திருவிழா நடந்தது. இந்த உணவு திருவிழா குறித்து கூறுகையில், கொரோனா வதந்தியால் மக்கள் பலரும் சிக்கன் மற்றும் முட்டைகளை வாங்குவதை தவிர்த்தனர். மேலும், சிக்கன் விலை சரிந்தும் மக்கள் அதை வாங்குவதை தவிர்த்தனர்.
இதனால் சிக்கன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த உணவுத்திருவிழாவை நடத்தியதாக கூறினார்கள். 200 ரூபாய்க்கு கொரோனா கிரில் சிக்கன், 20 ரூபாய்க்கு கொரோன ஆம்ப்லேட் போன்ற உணவுகள் அங்கு வைக்கப்பட்டுள்ளது. கொரோனா கிரில் சிக்கனுக்கான பெயர் காரணம் குறித்து கூறுகையில்,
மற்ற கிரில் சிக்கனில் மசாலா மற்றும் சாஸ் சேர்ப்பர். ஆனால் இதில் இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியாக இடித்து சிக்கனில் பூசி கிரில் செய்து வழங்கிவருவதாக கூறினார். கொரோனா கிரில் சிக்கன் வாங்கினால் 10 பரோட்டா இலவசம் எனவும், 500 ரூபாய் மதிப்புள்ள கொரோனா பக்கெட் பிரியாணி வாங்கினால் 10 முட்டை இலவசம் என அறிவித்தார்.
இதனையடுத்து, இந்த இரண்டு நாள்கள் கூட்டம் அலை மோதுவதாகவும், வழக்கத்தை விட விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கடையின் உரிமையாளர் கூறினார்.