ஹெச்.ராஜா மீது பாயும் நடவடிக்கை! வன்முறையைத் தூண்டிவிட்டு, பொது அமைதியை சிதைக்கும் வகையில் செயல்பாடு ….
சென்னை உயர் நீதிமன்றம், வன்முறையைத் தூண்டிவிட்டு, பொது அமைதியை சிதைக்கும் வகையில் செயல்படுவதாக எச்.ராஜாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை கோரி புகார் தாரர் தொடர்ந்த வழக்கில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா முக நூலில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து, அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அந்தப் பதிவை நீக்கினார். ஆனாலும் பதற்றமான சூழ்நிலை காரணமாக வேலூர் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது.
இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து முகநூல் பதிவை தாம் போடவில்லை தனது அட்மின் பதிவு செய்துவிட்டார் என்று எச்.ராஜா பேட்டி அளித்தார். ஆனாலும் அதை அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழகத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு, சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் எச்.ராஜா செயல்படுவதாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயரட்சன் கடந்த மார்ச் 6-ம் தேதி அன்று புகார் அளித்தார்.
ஆனால் தனது புகார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயரட்சன் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு குறித்து விழுப்புரம் எஸ்.பி, கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.