நல்ல விதமாக ஜோசியம் சொல்லாததால் முதியவரை செருப்பால் அடித்த போலீஸ் எஸ்.ஐ..!

Default Image

பரமக்குடியில் முதியவரை சரமாரியாக செருப்பால் சப்-இன்ஸ்பெக்டர் அடித்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இந்த எஸ்ஐ மீது, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முனியசாமி (57). இவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். வயதானவர்களிடம் குறி கேட்பதில் ஆர்வமுள்ளவர். நல்லவிதமாக குறி சொன்னால், கேட்டு விட்டு மகிழ்ச்சியாக வந்து விடுவார். எதிர்மறையாக ஏதாவது சொன்னால், குறி சொல்பவரை தாக்கி வருவதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் பரமக்குடி டவுன் பகுதியில் உள்ள கடையின் வாசலில் இருந்த முதியவரிடம் குறி கேட்டார். அப்போது, ‘‘நான் விரைவில் ஓய்வு பெற போவதால், உரிய பணப்பலன்கள் சிக்கலின்றி கிடைக்குமா’’ என்று கேட்டுள்ளார். அதற்கு முதியவர், ‘‘ஒன்றும் கிடைக்காது. கொஞ்சம் சிக்கலாகத்தான் அமையும்’’ என கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த எஸ்ஐ முனியசாமி, செருப்பால் முதியவரை சரமாரியாக தாக்கினார். வலி தாங்க முடியாமல் முதியவர் கதறத் தொடங்கினார். எஸ்ஐ தாக்குவதால் யாரும் சென்று தடுக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் வலி தாங்காமல், முதியவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.இதனை செல்போனில் வீடியோ எடுத்தவர்கள், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் வீடியோ வைரலாக பரவியது. சப்-இன்ஸ்பெக்டரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உயரதிகாரிகள் உடனடியாக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கடந்த ஆண்டு பரமக்குடியில் நடந்த கோயில் விழா பாதுகாப்புக்கு சென்ற முனியசாமி பணியில் இருந்த போது, போலீஸ் உடையுடன் கோயில் நிகழ்ச்சியில் நடந்த பாட்டு கச்சேரியில் சினிமா பாடலை பாடி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்