திண்டுக்கல் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல்!
திண்டுக்கல் மாவட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராம், பாபுலால், கோகுல்ராம், ஜூவன்ராம். இவர்கள் 4 பேரும் திண்டுக்கல் பள்ளிவாசல் தெருவில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 22-ந்தேதி முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் கடைகளுக்குள் புகுந்தனர்.அப்போது, அவர்கள் கையில் வைத்திருந்த இரும்பு கம்பிகளால் 4 கடைகளின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். மேலும், உள்ளே இருந்த பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடினர்.
இதன் காரணமாக அவர்கள் அளித்த புகாரின்பேரில் நகரின் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல், ராஜஸ்தானை சேர்ந்த மற்றொரு நபர் ஹேமாராம் என்பவர் இவர் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். அந்த கடை மீதும் கடந்த 29-ந்தேதி இரவு திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இரும்பு கம்பியுடன் புகுந்த 5 மர்ம நபர்கள் கடையை அடித்து நொறுக்கினர். இதை தடுக்க முயன்ற ஹேமாராமுக்கும் அடி விழுந்ததால் அவர் கடைக்குள்ளேயே பதுங்கி கொண்டார்.மேலும், கடை மீது பெட்ரோல் குண்டையும் வீசிவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் அது வெடிக்காததால் ஹேமாராம் லேசான காயத்துடன் தப்பினார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களின் உருவம் அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது.எனவே ராஜஸ்தானை சேர்ந்தவர்களின் கடைகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேமராவில் பதிவான காட்சிகளை துருப்பு சீட்டாக வைத்து போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.