ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து.!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டி போட்டியில் வெற்றியைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணி ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்.

நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பே ஓவலில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை இழந்து 431 எடுத்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 129, பிஜே வாட்லிங் 73, ரோஸ் டெய்லர் 70 ரன்களை எடுத்தனர்.

ஷாஹீன் ஃப்ரெடி 4, யாசிர் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து 192 முன்னிலை பெற்று, இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் இழந்து, 180 ரன்களில் டிக்ளர் செய்தது. பின்னர் 373 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டத்தை இழந்தது.

இந்நிலையில், நியூசிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன், ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். இந்த வெற்றியால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 117 மதிப்பீடுகளுடன் நியூசிலாந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை வென்றால், நியூசிலாந்து அணி முதலிடத்தை உறுதிப்படுத்தும். இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்ததால் தரவரிசையில் 2-ம் இடத்திற்கு 116 மதிப்பீடுகளுடன் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்