தமிழக கோயில்கள் தொடர்பாக மக்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க புதிய திட்டம் – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

தமிழக கோயில்கள் தொடர்பாக மக்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க புதிய திட்டம் – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள கோயில்கள் தொடர்பாக மக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க புதிய இணையவழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்,தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வகையில் புதிய இணையவழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதில்,”இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள்,மனைகள் மற்றும் கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளன.இதனால், அவற்றின் வாடகைத் தொகை,குத்தகைத் தொகை மற்றும் குத்தகை நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக,பொதுமக்களிடமிருந்து இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்கள் வருகின்றன.

இதன்காரணமாக,தமிழக முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி,திருக்கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்,தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வகையில் ‘கோரிக்கைகளைப் பதிவிடுக’ என்ற  புதிய திட்டம் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளமான https://hrce.tn.gov.in//hrcehome/index.php இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே,கோரிக்கைகளைப் பதிவு செய்ய விரும்புவோர் தங்களது தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும்.கோரிக்கைகளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.கோரிக்கைகளைப் பதிவு செய்த பின்னர்,தங்களது தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஓர் ஒப்புகை அட்டையுடன் பதிவெண் அனுப்பப்படும்.

கோரிக்கைகளின் மீதான நடவடிக்கைகள் இந்துசமய அறநிலையத்துறை ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும்.அதுமட்டுமன்றி, கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் என்னால் விரிவாக ஆய்வு செய்யப்படும்.

சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்,ஒப்புகை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண்ணை உள்ளீடு செய்து கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த திட்டத்தினை நன்கு பயன்படுத்தி துறை மற்றும் திருக்கோயில்கள் செயல்பாட்டினை மேம்படுத்திட உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube