நேபாளின் புதிய பிரதமர் பதவி ஏற்பு; தவறவிட்ட இடத்தை திரும்ப பிடித்த கே.பி.ஓலி…

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்ற நிலையில் 3 வது முறையாக பதவி ஏற்பு !

கே.பி.சர்மா ஓலி தற்போது நேபாளின் 3 வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளார், அவர் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை இழந்த சில நாட்களுக்குப் பிறகு பிரதமராக அறிவிக்கப்பட்டார். திங்களன்று சபை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ஓலி இழந்ததை அடுத்து வியாழக்கிழமை இரவு 9 மணிக்குள் புதிய அரசாங்கத்தை அமைக்க பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கொண்டு வருமாறு எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி கேட்டுக் கொண்டார், ஆனால் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பெறத் தவறிவிட்டது.

இதனையடுத்து வியாழக்கிழமை இரவு கே.பி.சர்மா ஓலி மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டார், பின்னர் வெள்ளிக்கிழமை அன்று அதிபர் பித்யா தேவி பண்டாரி, ஷிலால் நிவாஸில் நடந்த பதவியேற்பு விழாவில், 69 வயதான ஓலிக்கு சத்தியப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பை  வழங்கினார்.எனினும்,கே.பி.சா்மா ஓலி அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவியேற்ற 30 நாட்களுக்குள்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

முன்னதாக ஓலி அக்டோபர் 11, 2015 முதல் ஆகஸ்ட் 3, 2016 வரையிலும், மீண்டும் பிப்ரவரி 15, 2018 முதல் மே 13, 2021 வரையிலும் பிரதமராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.