மேகதாது அணை விவகாரம்:புதிய அணை, நீர்த்தேக்கம் என எதையும் கட்டக்கூடாது…! முதலமைச்சர் பழனிச்சாமி

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் மாதந்தோறும் நீர் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்தது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தியது.இதனால் இன்று மாலை 4 மணிக்கு இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க, திமுக எம்.எல்.ஏக்கள் தலைமை செயலகம் வந்தடைந்தனர்.
இதன் பின்னர் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது.அரசின் தீர்மானத்தின் மீது முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.
சிவசமுத்திரம், மேகதாது நீர்மின் திட்ட விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படும் கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அரசிதழில் வெளியிடப்பட்டு தீர்ப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் மாதந்தோறும் நீர் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்தது .கர்நாடக அரசின் எந்த திட்டத்திற்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க கூடாது என ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று கடிதம் எழுதினேன், பிரதமரை சந்தித்தும் வலியுறுத்தினேன்.மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கிய உடனே, கர்நாடகாவின் தன்னிச்சையான நடவடிக்கையை கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.புதிய அணை, நீர்த்தேக்கம் என எதையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது, கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment