கை, கால்களில் உள்ள நகங்கள் வளரவில்லையா? வேகமாகவும் வலிமையாகவும் வளர 5 குறிப்புகள்..!

பெண்கள் தங்களது அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர்கள். முக அழகை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் கை, கால் பராமரிப்புகளிலும் அதிக ஈடுபாடுகாட்டி வருகின்றனர். சில பெண்களின் நகங்கள் பார்ப்பதற்கு நீளமாகவும், அதில் அழகாக வண்ணப்பூச்சு செய்தும் வைத்திருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் இதுபோன்று நீளமான நகங்கள் இருப்பது கிடையாது.

சிலருக்கு நகங்கள் மிகவும் சிறியதாகவும் வளர்ச்சியும் குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு கால்சியம் சத்து குறைவாக இருப்பதால் சிறிது நகங்கள் வளர்ந்தவுடனேயே உடைந்து விடும். நகங்கள் வேகமாக வளர்வதற்கு இயற்கையான முறையில் 5 வழிமுறைகள்.

1. தேங்காய் எண்ணெய்

நன்மைகள்: தேங்காய் எண்ணெய் உச்சி முதல் பாதம் வரை பாதுகாக்கக்கூடிய அளவிற்கு அதிக நன்மை நிறைந்த ஒன்று. தேங்காய் எண்ணெய் சருமத்தில் கிருமி தாக்காமல் இருப்பதற்கு பயனுள்ளது. சுருக்கம் ஏற்படுவதை தடுக்கவும், சருமம் பொலிவுடன் இருக்கவும் பயன்படுகிறது.

உபயோகிக்கும் முறை: நகங்கள் உடைவதைத் தடுக்கவும், அவை பளபளப்பாகவும் இருக்கவும், 1/4 கப் தேங்காய் எண்ணெயில் சம அளவு தேன் மற்றும் 4 சொட்டு ரோஸ்மேரி எண்ணெயை கலந்து சிறிது சூடாக்கவும். இந்த கலவையை உங்களது நகங்களில் போட்டுக்கொள்ளவும்.

இடைப்பட்ட காலம்: இந்த கலவையில் உங்கள் நகங்களை சுமார் 15 நிமிடங்கள் நனைக்கவும். வாரத்தில் சுமார் இரண்டு நாட்கள் இதைச் செய்யுங்கள்.

2. ஆரஞ்சு சாறு

நன்மைகள்: ஆரஞ்சு சாறு நகங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில்  வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது.

உபயோகிக்கும் முறை: உங்கள் நகங்களை ஆரஞ்சு சாற்றில் சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதற்குப் பிறகு, நகங்களை சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, நகங்களுக்கு மாய்ஸ்சரைசர் தடவவும்.

இடைப்பட்ட காலம்: வாரத்தில் இரண்டு மூன்று முறை இதைச் செய்வது நகங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

3. பால் மற்றும் முட்டை

நன்மைகள்: நகங்களை வலுப்படுத்த பால் மற்றும் முட்டை உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். பால் நமக்கு சரும செல்களை சரிசெய்வதோடு, புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது. முட்டை சருமத்தில் உள்ள தளர்வுகளை அகற்றி சருமத்தை இறுக்கமாக வைக்க பெரிதும் உதவும்.

உபயோகிக்கும் முறை: ஒரு முட்டையின் வெள்ளை பகுதியில் பாலை கலந்து அதை நன்றாக அடித்து, அதில் நகங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை மூழ்க வைக்கவும்.

இடைப்பட்ட காலம்: வாரத்திற்கு 2-3 முறை இதைச் செய்வதன் மூலம், நகங்கள் வலிமையுடன் வளரத் தொடங்கும்.

4. பூண்டு

நன்மைகள்: பூண்டு காரத்தன்மை உடையது. இது மருத்துவ குணங்கள் அதிகம் உடையது. நகங்களில் உள்ள பாக்டீரியா கிருமிகளை அழித்து விடும் தன்மை உடையது.

உபயோகிக்கும் முறை: உங்கள் நகங்களில் பூண்டு விழுதை நன்றாக தேய்த்து விடவும். இது நகங்களை வலுப்படுத்தி வளரச்செய்யும். மேலும், ஆப்பிள் சைடர் வினிகரை பூண்டு விழுதுடன் கலந்து தேய்த்தால் இதன் முடிவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இடைப்பட்ட காலம்: இதனை 10 நிமிடங்கள் நன்றாக தேய்க்கவும். வாரத்தில் 2-3 முறை இதை செய்யலாம்.

5. எலுமிச்சை சாறு

நன்மைகள்: எலுமிச்சை சாறு நகங்களில் உள்ள கருமையை நீக்க உதவும். நகங்கள் பொலிவுடன் இருக்கவும் உதவியாக இருக்கும். இது நகங்களை வளர்த்து அவற்றை வலிமையாக்குகிறது.

உபயோகிக்கும் முறை: ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் மூன்று ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலந்து அதனுடன் நகங்களை மசாஜ் செய்யுங்கள் அல்லது நகங்களை இந்த கலவையில் நனைத்து வைக்கவும்.

இடைப்பட்ட காலம்: இந்த மசாஜை 5 முதல் 10 நிமிடங்கள் செய்யலாம். வாரத்தில் 2-3 முறை இதை செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.