ஜனநாயக அரசை சேர்ந்த முன்னாள் எம்.பிக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்த மியான்மர் ராணுவம்!

மியான்மரில் ஜனநாயக ஆட்சி நடைபெற்ற பொழுது எம்.பிக்களாக இருந்த அனைவரையும் மியான்மரில் உள்ள ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே கைது செய்யப்பட்டு மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து மியான்மர் மக்கள் மற்றும் உலகின் பல நாடுகளில் உள்ள மக்களும் மியான்மரில் நடக்கக்கூடிய ராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ச்சியாக மியான்மரில் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்பொழுதும் ராணுவ ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய ஆளும் கட்சித் தலைவர்கள் பலரையும் இராணுவம் கைது செய்து வருகிறது. இந்நிலையில், மியான்மரின் நிழல் அரசாக செயல்பட்டு வரக்கூடிய சி.ஆர்.பி.எச் அரசு நாட்டு மக்களுக்கு சாதகமாக செயல்படுவதுடன் அதற்கான அங்கீகாரத்தையும் நாடி வருகிறது.

ஆனால் இந்த சி.ஆர்.பி.எச் அரசை சட்டவிரோதமாக கருதக்கூடிய மியான்மர் இராணுவத்தினர், இந்த குழுவுடன் ஒத்துழைக்கக் கூடிய எவரும் தேசத்துரோக குற்றம் செய்தவர்களாக கருதப்பட்டு அதற்கான தண்டனையையும் பெறக்கூடும் என எச்சரித்துள்ளது. இந்நிலையில் இந்த சி.ஆர்.பி.எச் அரசுக்கு இராணுவத்தினரால் கவிழ்க்கப்பட்ட ஜனநாயக ரீதியிலான ஆங்சான் சூகி அரசை சேர்ந்த எம்பிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனராம்.

எனவே ராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததுடன், இந்த இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வருவதால் முந்தைய ஜனநாயக ரீதியிலான அரசை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் நிழல் அரசாகிய சி.ஆர்.பி.எச் அரசின் மூலம் மக்கள் பாதுகாப்பு படை ஒன்று கடந்த வாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படையும் பயங்கரவாத இயக்கம் என மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது.

author avatar
Rebekal