தனது கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டன…. மல்யுத்த வீராங்கனைகள் சந்திப்பிற்கு பிறகு பி.டி உஷா.!

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தில் அவர்களை சந்தித்த பிறகு, தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக உஷா கூறினார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் WFI தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவர் பி.டி உஷா  மல்யுத்த வீரர்களை சந்தித்தார். முன்னதாக பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான பாலியல் புகார்களை ஆராய, பி.டி உஷா தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தான் தாங்கள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்ததாக வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக வீராங்கனைகள் தெருக்களில் போராட்டம் நடத்தியிருக்கக் கூடாது, எங்களிடம் வந்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் செய்தது விளையாட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. இது எதிர்மறையான அணுகுமுறை என்றும், ஒழுங்கீனமான செயல் எனவும் உஷா கூறியிருந்தார்.

உஷாவின் இந்த கூற்றுக்கு மல்யுத்த வீரர்கள் கடுமையாக பதிலளித்தனர், அவர்கள் ஆதரவை தாங்கள் எதிர்பார்க்கும் நிலையில் அவரது கருத்துக்களால் தாங்கள் புண்பட்டதாகக் கூறினர். அவர் ஒரு பெண்ணாக இருந்தும் எங்களை ஆதரிக்கவில்லை.

காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த போதிலும், WFI தலைவரை உடனடியாக கைது செய்ய கோரி தங்கள் போராட்டத்தை தொடரப்போவதாக மல்யுத்த வீரர்கள் தெரிவித்தனர். வீரர்களின் சந்திப்பிற்கு பிறகு பேசிய உஷா தனது கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

author avatar
Muthu Kumar