மும்பை:டெம்போவுக்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் உயிரிழப்பு ;கம்பியால் தாக்கிய கொடூரன் கைது

rape

மும்பை: செப்டம்பர் 9 ஆம் தேதி மும்பை சகி நகா பகுதியில் உள்ள கைரானி சாலையில் டெம்போவுக்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 30 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் கைராணி சாலையில் ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை குழு, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஒரு 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை மீட்டு மும்பை ராஜவாடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவளது அந்தரங்க பகுதிகளில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுள்ளார், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போவுக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.வாகனத்தின் உள்ளே இரத்தக் கறைகள் காணப்பட்டன.

இதன் பின்னர் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ,ராஜவாடி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் 2012 டெல்லி பாலியல் பலாத்கார வழக்கை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

டிசம்பர் 2012 இல், ஒரு இளம் பெண் (நிர்பயா வழக்கு),கொடூரமான கும்பலால் டெல்லியில் ஓடும் பஸ்சிற்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.பல நாட்கள் உயிருக்கு போராடிய அவர் மருத்துவமனையில் இறந்தார்.