1 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி மும்பை புதிய சாதனை..!

இந்தியாவில் முதன் முதலாக 1 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி மும்பை சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளையும், சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவலில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி  தொடங்கப்பட்டது.

மக்களும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரபல நகரமான மும்பை மாவட்டத்தில் 1 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. நாட்டில் முதன் முதலாக 1 கோடி தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற பெருமையை அடைந்துள்ளது மும்பை.

மும்பையில் இதுவரை 507 கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 1,00,63,497 பேருக்கு கொரோனா தடுப்பூசி மும்பையில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 72,75,134 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 27,88,363 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.