கொரோனா தடுப்பூசி மருந்திற்கு பதிலாக உப்புத் தண்ணீர் – விசாரிக்க சிறப்பு குழு..!

மும்பையில் கொரோனா தடுப்பூசி மருந்திற்கு பதிலாக உப்புத் தண்ணீர் செலுத்திய மோசடி விவகாரம் தொடர்பாக  விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மும்பையின் சில பகுதிகளில் மே 25 முதல் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில்,போலியான தடுப்பூசி செலுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.மேலும்,மருந்துக் குப்பிகளின் மூடிகள் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்ததைக் கண்ட மக்கள்,அதுகுறித்து சந்தேகம் அடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து,மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்,அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது,மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளதால்,அதைப் பயன்படுத்தி சிலர்,அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் முகாம்களை நடத்தியுள்ளனர்.மேலும்,தனியார் மருத்துவமனைகளிலிருந்து ஏற்கனவே பயன்படுத்திய தடுப்பூசி மருந்து குப்பிகளை பெற்று அதில் உப்புத் தண்ணீரை நிரப்பி சுமார் 2 ஆயிரம் பேருக்கு செலுத்தியுள்ளனர். இதன்மூலமாக ரூ.12.40 தொகையை கட்டணமாக பெற்றுள்ளனர் என்பது காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும்,தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி போலியான சான்றிதழ்களையும் தயாரித்து அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து,இந்த மோசடியில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து,அவர்களின் மீது ஆள்மாற்றட்டம்,கலப்படம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

மேலும்,இதுகுறித்து விசாரிக்க ஒரு சிறப்பு குழுவை மும்பை காவல்துறையினர் அமைத்துள்ளனர்.