கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை – எம்.பி ரவிக்குமார் கோரிக்கை..!

  • தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கும் திட்டம் 1986 ஆம் ஆண்டு,அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களால் கொண்டு வரப்பட்டது.

ஆனால்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால்,இந்த உத்தரவுக்கான அரசாணை இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணி நியமனத்தில் முன்னுரிமை அளித்து,அதனை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும்,எம்.பி. மற்றும் டாக்டருமான ரவிக்குமார் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்.பி.ரவிக்குமார் கூறியிருப்பதாவது:

  • “தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களைச் சேர்த்து தமிழக அரசு 1986 ஆம் ஆண்டு ஆணையிட்டுள்ளது.
  • 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை அன்றைய திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தின்போது கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் பணி நியமனம் பெற்று இருந்தனர்.
  • ஆனால்,கடந்த 5 ஆண்டுகளாக கலப்புத் திருமணம் செய்துகொண்ட எவரும் ஆசிரியர் பணியில் நியமனம் செய்யப்படவில்லை.
  • மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தைக் கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. சமூக அக்கறை கொண்ட தங்களது தலைமையிலான அரசு இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உரிய ஆணை வழங்குமாறு வேண்டுகிறேன்”,என்று கோரிக்கை விடுத்துள்ளார்.