என் வாழ்க்கையில் தாய், தந்தை, அண்ணன், எல்லாமே பாலசந்தர் தான்.!

மறைந்த கே. பாலசந்தரின்  90வது பிறந்தநாளான இன்று ரஜினிகாந்த் அவர்கள் எத்தனையோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த பெரிய மகான் என்று கூறி அவருடனான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநரான கே. பாலசந்தர் அவர்களுக்கு இன்று 90வது பிறந்தநாளாகும். சர்வர் சுந்தரம், ஆபூர்வ ராகங்கள் , அவள் ஒரு தொடர்கதை உள்ளிட்ட ஏராளமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர். இவருக்கு 9 தேசிய விருதுகள் உட்பட பத்மஸ்ரீ, தாதாசாகிப் பால்கே ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது. இவர் கடந்த 2014ல் டிசம்பர் 23ம் தேதி இயற்கை எய்தினார். அவரின் 90வது பிறந்தநாளான இன்று, பல பிரபலங்கள் அவருடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவை கே. பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா தனது யூடுபில் வெளியிட்டுள்ளது.

கே. பாலசந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர். அவர் கே. பாலசந்தர் குறித்து கூறியதாவது, என் குருநாதரான கே. பாலசந்தர் சாருக்கு இன்று 90வது பிறந்தநாளாகும். அவர் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், கன்னட சினிமாவில் வில்லனாகவோ, சின்ன கதாபாத்திரத்திலும் நடித்து சின்ன நடிகராக இருந்திருப்பேன் நான் இன்றும் பேரும், புகழோடும், நல்ல வசதிகளுடன் வாழ்வதற்கு காரணம்  கே. பாலசந்தர் தான் என்றும், என்னை தேர்ந்தெடுத்து பெயர் வைத்ததோடு எனது மைனஸை கண்டறிந்து எனது பிளஸ் என்ன என்பதை எனக்கு காட்டி தந்தவர். எனது அப்பா, அம்மா, அண்ணாவை அடுத்து தெய்வமாக கருதுபவர் கே. பாலசந்தர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கே. பாலசந்தர் அவர்கள் தனக்கு மட்டுமில்லாமல் எத்தனையோ நடிகை, நடிகர்களை அறிமுகப்படுத்தி வாழ்க்கை கொடுத்திருக்கிறார். அவரால் வாழ்ந்தவர்கள் பலர். நான் இந்தி உட்பட பல இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன். ஆனால் டெக்னீசியன் ஆரம்பித்து நடிகர், நடிகைகள் மற்றும் லைட் மேன் உட்பட பலர் கே. பாலசந்தர் அரங்கினுள் வந்தாலே எழுந்து நின்று வணக்கம் வைப்பார்கள். அவ்வளவு கம்பீரமானவர். அவர் மனித ஜென்மம் எடுத்து வந்து உலகத்திலுள்ள அனைத்து கடமைகளையும் சரிவர செய்துவிட்டு காலமாகிவிட்டார். எத்தனையோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த பெரிய மகான். அவரது 90வது பிறந்தநாளான இன்று கே. பி சாரை நினைவுபடுத்தி கொள்வதில் மகிழ்ச்சி என்றும், அவரது ஆத்மா நிம்மதியாக சாந்தியடைய வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.