உயிருக்கு போராடும் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை மோடி அரசு ஏற்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி!

உயிருக்கு போராடக்கூடிய மக்களை பாதுகாக்கும் பொறுப்பை மோடி அரசு ஏற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

உயிருக்கு போராடக்கூடிய மக்களை பாதுகாக்கும் பொறுப்பை மோடி அரசு ஏற்க வேண்டும் எனவும், தமிழகத்திற்கு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் கட்டப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது எனவும் கே எஸ் அழகிரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுகிற திட்டத்தை நிறைவேற்றத் தமிழக முதலமைச்சர் உலகளாவிய டெண்டர் மூலம் கொள்முதல் செய்யத் தீவிரம் காட்டியிருக்கிறார்.

அனைத்து மாநிலங்கள் மூலமாக 188கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு ரூ.75000 கோடி தான் தேவைப்படும். ஏற்கனவே பட்ஜெட்டில் ரூ.35000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி ரூ.40000 கோடியை உடனடியாக ஒதுக்கி உயிருக்கு போராடுகிற மக்களை பாதுகாக்கும் பொறுப்பை மோடி அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்.

பஞ்சாப், டெல்லி மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சியில் தடுப்பூசிகளை மத்திய அரசுக்குதான் விற்பனைசெய்ய முடியுமே தவிர மாநிலங்களுக்கு நேரடியாக விற்பனைசெய்ய முடியாது என தடுப்பூசி உற்பத்தி செய்கிற மாடர்னா-பைசர் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது மாநிலங்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

6.37 கோடி மக்கள்தொகை கொண்ட குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு மொத்த தடுப்பூசி விநியோகத்தில் 16.4% வழங்கியிருக்கிறது. ஆனால் 8.3 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு வெறும் 6.4%தான் வழங்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடியின் அப்பட்டமான, பாரபட்சமான அணுகுமுறை வெளிப்பட்டிருக்கிறது.

இதுவரை மத்திய அரசு 21 கோடி தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 22.4 சதவீதத்தினருக்குத் தான் ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்க முடியும். இதுவரை 4.5 சதவீதத்தினருக்குத் தான் இரண்டு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

author avatar
Rebekal