7.5 % இடஒதுக்கீட்டிற்கு எவ்வித ஆபத்தும் வந்திடாதவாறு பாதுகாத்திட வேண்டும் -மு.க.ஸ்டாலின்  

புதுச்சேரியைச் சேர்ந்த ப்ளஸ்-டூ மாணவியின் தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திவ்யதர்ஷினி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தது.அதில், புதுச்சேரி மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு தந்தால், நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போக செய்யும் என மத்திய அரசு பதில் மனுவில் தெரிவித்தது. மேலும், தமிழகத்தில் உள்ள 7.5% இட ஒதுக்கீடு சட்டம் பற்றி தங்களது கவனத்திற்கு வரவில்லை என்றும் மத்திய அரசு குறிப்பிட்டது.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது” என்று புதுச்சேரியைச் சேர்ந்த ப்ளஸ்-டூ மாணவியின் தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்திலும் – புதுச்சேரியிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மீது – குறிப்பாக, மருத்துவக் கல்வி கற்க வேண்டும் என்று கருதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், புதுச்சேரி மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, இந்த ஆண்டே புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
“விளம்பர மோகத்தில்” மயங்கிக் கிடக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டால் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எவ்வித ஆபத்தும் வந்திடாதவாறு – மிகவும் விழிப்புடன் இருந்து பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.