திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி திரும்பப்பெறப்படுகிறதா ? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை திரும்பப்பெறுவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இருக்கைகளை வைத்து திரையரங்குகளை இயக்கலாம் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

இதற்கு விஜய், சிம்பு, உட்பட நடிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், மருத்துவர்கள், பொதுமக்கள் என பலரும் திரையரங்கில் 100 சதவீத அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.எனவே தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியது, விதிகளை மீறியதாகவும், அனுமதி வழங்கியதை திரும்பப்பெற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதுகுறித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழகத்தில் மருத்துவக்குழுவின் ஆலோசனையை கேட்டுத்தான் ,தமிழக முதலமைச்சர் முடிவு எடுத்து வருகிறார்.அந்த சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுத்த காரணத்தினால் தான் மிகப்பெரிய வெற்றி உள்ளது. பொதுச்சுகாதார விதிகளில் எவ்வித சமரசமும் செய்துக்கொள்ளப்படாது.திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை திரும்பப்பெறுவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு எடுக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்.