பெண் ஊழியருடன் பல வருடங்கள் பாலியல் தொடர்பு- பில் கேட்ஸ் மீது விசாரணை..!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கும் அதே நிறுவன பெண் ஊழியர் ஒருவருக்கும் இடையே நீண்ட காலமாக உறவு இருந்ததாகவும்,அதனால், மைக்ரோசாப்ட் போர்டு பில் கேட்ஸ் மீது விசாரணை நடத்தியதாகவும் வால்ஸ்ட்ரீட் இதழ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் தனக்கு பல ஆண்டுகளாக பாலியல் உறவு உள்ளது என்று மைக்ரோசாப்ட் பெண் ஊழியர் ஒருவர் கடிதம் மூலம் தெரிவித்ததையடுத்து,பில் கேட்ஸுக்கும் பெண் ஊழியருக்கும் இடையே இருந்த உறவு குறித்து விசாரணை நடத்த மைக்ரோசாப்ட் போர்டு அமைப்பினர்,சட்ட நிறுவனம் ஒன்றை 2019-ம் ஆண்டு நியமித்தனர்.

ஆனால்,மைக்ரோசாப்ட் நடத்திய இந்த விசாரணை முடிவதற்கு முன்பே பில் கேட்ஸ் போர்டிலிருந்து விலகினார்.அதன்பின்னர்,மைக்ரோசாப்ட் போர்டு உறுப்பினர்கள் கடந்த 2020ம் ஆண்டு இதுகுறித்து கூறியதாவது, “மைக்ரோசாப்ட் போர்டில் பில் கேட்ஸ் நீடிக்கத் தகுதியற்றவர்,ஏனெனில் மைக்ரோசாப்ட் பெண் ஊழியருடன் பில் கேட்ஸ் வைத்திருந்த உறவு முறையானதல்ல”, என்று கூறியதாக வால்ஸ்ட்ரீட் இதழ் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,இதுகுறித்து பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வால்ஸ்ட்ரீட் செய்தி நிறுவனத்திடம்,20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பில் கேட்ஸுக்கும் பெண் ஊழியருக்கும் இடையே உறவு இருந்ததாக தெரிவித்தார்.

மேலும்,பில் கேட்ஸின் இத்தகைய உறவுகள் குறித்து நியூயார்க் டைம்ஸ் இதழும் சில விவரங்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து,பில் கேட்ஸுடன் நெருங்கிய உறவில் இருந்ததாக கூறப்படும் ஜெப்ரி எட்வர்ட்,அமெரிக்காவில் நிதி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்தார்.எனினும்,பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றார்.மேலும்,பெண் குழந்தைகளை வைத்து மிகப் பெரிய பாலியல் ‘நெட்வொர்க்’ நடத்தி வந்ததாக ஜெப்ரி மீது குற்றம் சாட்டப்பட்டது.இதனையடுத்து,வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,சிறையில் இருந்த நிலையில் ஜெப்ரி உயிரிழந்தார்.

இருப்பினும்,பில் கேட்ஸ் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எனினும்,மே மாத தொடக்கத்தில்,பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் திருமணமாகி 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.ஆனால்,உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இருவரும் தொடர்ந்து பணியாற்றுவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.