நமது கைகளில் தவழும் தொலைபேசியை கண்டுபிடித்த தொலைபேசி நாயகனின் நினைவு தினம் இன்று!

நமது கைகளில் தவழும் தொலைபேசியை கண்டுபிடித்த தொலைபேசி நாயகனின் நினைவு தினம் இன்று!

அலெக்ஸ்சாண்டர் கிரகாம் பெல் ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் என பன்முக தன்மை கொண்ட ஒரு சாதனை மனிதன் ஆவார். இவர்  ஸ்காட்லாந்தில், 1847-ம் ஆண்டு, மார்ச் 3-ம் தேதி பிறந்தார். இவர் இளமையில் பிரித்தானிய குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்க குடியுரிமையை பெற்றார்.

காதுகேளாத பெண்ணை கரம்பிடித்த பெல்

இவர் தனது எட்டு வயதிலேயே நன்றாக பியானோ வாசிப்பதில் கைதேர்ந்தவர். பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாத கிரகாம், பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளை பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது கவனத்தை செலுத்தி வந்தார். இவர் பேச்சை மின்ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தபோது, ஒரு காதுகேளாத பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

உந்துசக்தி

இன்று நமது கைகளில் தொலைபேசி இருப்பதற்கு காரணமாக  திகழும் சாதனை மனிதன் கிரகாம். இவரது தாயாரும், மனைவியும் செவிடர்கள். இவர்களின் இந்த நிலை தான், பெல் தொலைபேசியை கண்டுபிடிப்பதற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது என்று கூட கூறலாம்.

இவரது ஆற்றல் மிக்க திறமையால், 1876-ம் ஆண்டு, அவர் கண்டுப்பிடித்த உலகின் முதல் தொலைபேசி மூலம், அவரது உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். பெல் முதலில் தொலைபேசியில் பேசிய முதல் சொற்றோடர் என்னவென்றால், ‘ வாட்சன் இங்கே வாருங்கள், உங்களை காண வேண்டும்”இவர் பேசிய இந்த சொற்களை வாட்சனால் தெளிவாக கேட்க முடிந்தது.

தொலைபேசியின் பெருமை

இவர் கண்டுபிடித்த தொலைபேசி பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை. இதனையடுத்து, பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், இவர் கண்டுபிடித்த தொலைபேசி பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனை பார்த்த பிரேசில் நாட்டு மன்னர் இதனை வியப்போடு எடுத்து பயன்படுத்தினார். அதன்பின் தான் இந்த தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது.

மறைவு 

இவ்வாறு பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த சாதனை நாயகன் கிரஹாம் பெல், அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில், 1922-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி காலமானார். இவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள அனைத்து தொலைபேசியிலும் 5 நிமிடம் அணைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube