மக்களே பீதி வேண்டாம்…தக்காளிக்கும் இதற்கும் தொடர்பில்லை – மரு.செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ள நிலையில்,கேரளாவின் கொல்லம் பகுதியில் 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு,கொல்லம் பகுதியில் தக்காளி வைரஸ் என்ற புதிய தொற்று பரவி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,தக்காளிக்கும்,தக்காளி வைரஸ் தொற்றுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும்,மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

“நுண்கிருமிகளில் பலவகை உண்டு.’தக்காளி வைரஸ்’ என்று கேரளாவில் சூட்டியதற்கு காரணம் என்னவெனில்,5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கன்னங்களில் வரும் ரேசஸ் சிவப்பு நிறத்தில் இருப்பதால்தான் ‘தக்காளி வைரஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி,தக்காளிக்கும் தக்காளி வைரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனினும்,நல்ல தண்ணீரில் வரும் கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மட்டுமல்லாமல்,போர்க்கால அடிப்படையில் மற்ற தொற்று பரவலையும் கட்டுப்படுத்த,கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

கொல்லம் பகுதியில் இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு பாராசிட்டாமல் கொடுத்தால் தானாக நோய் குணமாகி விடுகிறது.எனவே,மக்கள் பீதி அடைய வேண்டாம்”,என்று தெரிவித்துள்ளார்.