திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதன்பிறகு, அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவரது திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் இருந்து நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும் சில பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அதில் கூறியிருப்பதாவது ” மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி” என பதிவிட்டுள்ளார். மாரிமுத்து கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.
— Rajinikanth (@rajinikanth) September 8, 2023