விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவிய மாவோயிஸ்ட்டுகள் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

டெல்லியில் 17-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் , போராட்டத்தில்  மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயத் துறையில் பெரிய சீர்திருத்தங்களாக மத்திய அரசால் கணிக்கப்பட்டுள்ளன. அவை இடைத்தரகர்களை அகற்றி விவசாயிகள் நாட்டில் எங்கும் விற்க அனுமதிக்கும்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 17-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிற நிலையில்,மத்திய அரசுநடத்திய பல கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. ஆனால் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.இதற்கு இடையில் மத்திய அமைச்சர்களும் விவசாயிகள் போராட்டம்  குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில்,மத்திய ரயில்வே மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் வர்த்தகக் கூட்டமைப்பின் 93-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,விவசாயிகள் போராட்டத்தின் திசை மாறி வருகிறது.இந்த போராட்டத்தில்  மாவோயிஸ்டுகள் மற்றும் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பங்கேற்றுள்ளனர்.இவர்கள்  விவசாயிகளின் போராட்டத்தைத் தவறான வழியில் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.