வழிநெடுகிலும் கண்ணீர்….மனோபாலா உடல் தகனம் செய்யப்பட்டது.!

மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் உடல், வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நடிகரும், இயக்குனருமான மனோபாலா, கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது உடலுக்கு, நெருங்கிய உறவினர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தொடர்ந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது, இந்த இறுதி ஊர்வலத்தில் திரையுலக நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தற்போது அவரின் உடல் வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம் வழியாக கொண்டு செல்லப்பட்டு, வளசரவாக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மனோபாலா திரைப்பயணம்:

மனோபாலா சினிமாவிற்கு வந்த போது, இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர், 1979-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நடித்திருந்தார்.

ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான மனோபாலா ஊர்க்காவலன், பிள்ளை நிலா, சிறைப்பறவை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். படங்களை இயக்கியது மட்டுமின்றி, சமுத்திரம், ரமணா, பிதாமகன், காக்கி சட்டை, மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சினிமாத்துறையில் 48 ஆண்டுகள் பணியாற்றியுள்ள இவர் ‘The Lion King’ என்ற படத்தின் தமிழ் பதிப்பிற்கு டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.