துபாய்-அமிர்தசரஸ் விமானத்தில் குடிபோதையில் விமானப் பணிப்பெண்ணிடம் தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துபாயிலிருந்து அமிர்தசரஸ் செல்லும் விமானத்தில் குடிபோதையில் பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் கோட்லி கிராமத்தைச் சேர்ந்த ராஜிந்தர் சிங் என்ற நபர் விமானத்தில் குடிபோதையில் பயணம் செய்துள்ளார்.
இதனையடுத்து, ராஜிந்தர் சிங் விமானத்தில் உள்ள பணிப்பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் துன்புறுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தை விமானப் பணிப்பெண் குழுவினரிடம் தெரிவித்த நிலையில், விமான ஊழியர்கள் அமிர்தசரஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பிறகு விமான நிறுவனத்தின் உதவி பாதுகாப்பு மேலாளர் போலீசில் புகார் அளித்தார். பின்னர், விமானம் ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் போலீசார் ராஜிந்தர் சிங்கை கைது செய்துள்ளனர். ராஜிந்தர் சிங் குடிபோதையில் இருந்ததாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.