முதல்வர் பொறுப்பை மல்லிகார்ஜுன கார்கேவே ஏற்க வேண்டும் – டி.கே.சிவக்குமார்

கர்நாடக முதல்வர் பதவியை மல்லிகார்ஜூன கார்கேவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என டி.கே.சிவகுமார் கோரிக்கை.

கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி நிலையில், இதுவரை யார் முதலமைச்சர் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. கர்நாடகாவில் சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சமயத்தில், யார் முதல்வர் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் விவகாரம் தொடர்பாக சித்தராமையா, டிகே சிவகுமார் ஆகியோர் டெல்லி மல்லிகார்ஜுனா கார்கேவை சந்தித்து வந்தனர். இதன்பின், இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோருடன் இன்று அடுத்தடுத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

கர்நாடக முதல்வர் தேர்வில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன் என போட்டியில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்க உள்ளதாகவும், துணை முதல்வராக டிகே சிவகுமார் தவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், தனக்கு முதல்வர் பொறுப்பில்லை எனில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவே முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, துணை முதல்வர் பதவியோ, அமைச்சர் பதவியோ வேண்டாம் என டி.கே.சிவக்குமார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.

இதனிடையே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், கர்நாடக முதல்வர் தேர்வு தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். இன்று மாலை அல்லது நாளைக்குள் முதல்வர் யார்? குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சித் தலைவர் கார்கே வெளியிடுவார். மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்குள் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்