கொரோனா நோயாளிக்களுக்காக கழிவறையில் ஆக்ஸிஜன் வசதி செய்த மதுரை அரசு மருத்துவமனை.!

கொரோனா நோயாளிகளுக்காக மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் கழிவறையில் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு மதுரை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 450க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிப்புடைய நோயாளிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முக்கியம் என்பதால் மதுரை அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளது.

இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் அதிகம் பாதிப்பு உடையவர்களை கழிவறைக்கு செல்ல கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஏனெனில் அதிக பாதிப்பு உடையவர்கள் கழிவறைக்கு செல்லும் போது திடீரென ஆக்ஸிஜன் குறைப்பாடு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மறுத்துள்ளனர். தற்போது அதற்கு ஒரு தீர்வு காணும் பொருட்டாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் உள்ள கழிப்பறையின் வாசல் மற்றும் உள்பகுதியில் புதிதாக ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் கூறிய போது, அதிக பாதிப்பு உடையவர்கள் மட்டுமில்லாமல் மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கும் மூச்சு திணறல் எப்போது ஏற்படும் என்று கணிக்க முடியாது என்பதால் கழிவறையில் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கழிவறைக்கு செல்லும் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும், உயிரிழப்புகளும் தவிர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.