28 C
Chennai
Sunday, October 24, 2021

லாட்டரி சீட்டு விவகாரம் : லாட்டரி சீட்டு பற்றி சிந்திக்கவே இல்லை…! – அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

லாட்டரி சீட்டு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழ்நாடு அரசு லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர முயற்சிக்க வேண்டாம் என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “அ.தி.மு.க. அரசு சீரழித்த நிதி நிலைமையைச் சரிசெய்ய லாட்டரி பற்றிச் சிந்திக்கவே இல்லை”,  “கட்டுக்கதைகளைக் கூறி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நற்பணிகளுக்கும் சிறப்பான நிர்வாகத்திற்கும் களங்கம் கற்பிக்க முயற்சிக்க வேண்டாம்” எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி திரு. பழனிசாமிக்கு மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கண்டனம்.

“லாட்டரி சீட்டை மீண்டும் தி.மு.க. அரசு கொண்டு வர முயற்சிக்க வேண்டாம்” என்று உண்மைக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று வரலாற்றில் தனி முத்திரை பதிக்கும் ஒரு பொய் அறிக்கையினை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்களுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொல்லைப்புறவழியாக முதலமைச்சர் பதவிக்கு வந்து, தமிழ்நாட்டின் நிதி நிலைமை அதல பாதாளத்திற்குச் சென்றதற்குத் தலைமை தாங்கிய இன்றைய எதிர்கட்சித் தலைவர் தற்போது விரக்தியின் விளிம்பில் நின்று கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்.

அவரது நான்காண்டு கால ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழ்நாட்டின் நிதிநிலைமை எத்தகையை சரிவினை சிதைவினைச் சந்தித்துள்ளது என்பதை 15ஆவது நிதிக்குழுவும், மத்திய ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. 2015 சென்னை வெள்ளம் குறித்த சி.ஏ.ஜி அறிக்கை. 2017-18 மற்றும் 2018-19 மாநில நிதி குறித்த சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கை ஆகியவற்றை உரிய காலத்தில் உ சட்டமன்றத்திற்குக் கூட காட்டாமல் மூடி மறைத்து வைத்திருந்தவர் இதே எதிர்கட்சித் தலைவர்தான் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை கழக ஆட்சி அமைந்தவுடன் இந்தத் தணிக்கை அறிக்கைகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு சென்ற அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் தோல்விகள் பொது வெளிக்கு வந்துள்ளது நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. கண்ட தோல்வி “மாநில நிதி நிலை” குறித்து இனி வரப்போகும் வெள்ளை அறிக்கையில் மேலும் வெளிப்படப் போகிறது.

நிதித்துறையின் கோப்புகள் பலவற்றை எப்படி இதயமற்ற வகையில் கையெழுத்துப் போடாமல் மூட்டை கட்டி வைத்துவிட்டுச் சென்றார்கள் என்பதை நான் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் நேரில் கண்டேன் உயிர் நீத்த காவல்துறையினருக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் தலைமையிலான பேரிடர் ஆணைய நிதி வழங்கும் கோப்புகளைக் கூட மே 2021 வரை கையெழுத்திடாமல் விட்டுச் சென்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்.

எங்கள் தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் அந்தக் கோப்புகள் கூட கையெழுத்திடப்பட்டு – உயிர் நீத்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. உயிர்த் தியாகம் செய்தவர்களின் நிதியைக் கூட வழங்காமல் – மிக மோசமான நிர்வாகத்தை அளித்துவிட்டுப் போனவர் எடப்பாடி திரு பழனிசாமி ஆகவே, கொரோனா இரண்டாவது அலையைத் திறமையாகக் கையாண்டு தினந்தோறும் கடின உழைப்பால் சிறப்பான நிர்வாகத்தை அளித்து வருவதற்காக இன்று அனைவராலும் பாராட்டப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் மீது. “லாட்டரி பற்றி ஒரு கற்பனையைத் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டு” எடப்பாடி திரு பழனிசாமி அவர்கள் இப்படி களங்கம் கற்பிப்பது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசு ஆலோசனைகளிலோ ஆய்வுக் கூட்டங்களிலோ ஒருமுறை கூட லாட்டரி பற்றிய பேச்சே இதுவரை எழவில்லை என்பதை எதிர்கட்சித் தலைவருக்கு ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய எதிர்கட்சித் தலைவர் தனது மோசமான ஆட்சியால் நெருக்கடி மிகுந்த நிதிநிலைமையை விட்டுச் சென்றிருந்தாலும் சிதிலமடைந்த நிதி நிலைமையைச் சரிசெய்யும் கடும் நெருக்கடி மிகுந்த சூழலை இந்த அரசுக்கு ஏற்படுத்தி விட்டுச் சென்றிருந்தாலும் – மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கும் வழிகளில் லாட்டரி பற்றிய சிந்தனையே இந்த அரசுக்கு இல்லை நிதிப் பேரழிவில் மாநிலத்தை அ.தி.மு.க. விட்டுச் சென்றிருந்தாலும் அதை சரிசெய்ய நாங்கள் சிந்திக்கும் சூழலில் கூட- லாட்டரி எங்கள் சிந்தனை வட்டத்திற்குள்ளேயே இல்லை என்பதை எடப்பாடி திரு பழனிசாமி அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்கட்சித் தலைவருக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. அதை அவர் நினைவில் கொள்ளவேண்டும். எங்கள் முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது அந்தப் பொறுப்புக்குரிய மரியாதையை எப்படிக் காப்பாற்றினார் என்பதை எடப்பாடி திரு. பழனிசாமி அவர்கள் சற்று நினைத்துப் பார்க்கவேண்டும் எனவே மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் மாநில நிதி நிலைமையைச் சீர்படுத்தவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்கட்சித் தலைவரிடம் ஏதாவது ஆக்கபூர்வமான கருத்துகள் இருந்தால் வழங்கலாம். அதைவிடுத்து முற்றிலும் கற்பனையான கதைகளை அறிக்கையாக வெளியிட்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்குச் செய்து கொண்டிருக்கும் நற்பணிகளைத் திசை திருப்பும் வேலையில் ஒரு எதிர்கட்சித் தலைவர் ஈடுபடுவது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல. ஆகவே, இன்று அனைவராலும் பாராட்டப்படும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசை, கற்பனைகளை அடிப்படையாக வைத்துக் குறை கூறுவதை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி திரு பழனிசாமி அவர்கள் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் போலி விமர்சனங்களையும் கற்பனைக் கதைகளையும் கட்டவிழ்த்துவிட வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More