கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை – உத்தரபிரதேசத்தில் விழிப்புணர்வு நடவடிக்கை!

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை – உத்தரபிரதேசத்தில் விழிப்புணர்வு நடவடிக்கை!

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டுமென மதுக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் சிலர் ஆர்வம் காட்டினாலும், பலர் தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அச்சப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போடுவதற்காக பாரபங்கி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு அதிகாரிகள் குழு சென்றுள்ளது.

அப்போது தங்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அதிகாரிகள் வந்துள்ளதை  கண்ட கிராம மக்கள் அருகில் இருந்த ஆற்றில் குதித்து தலைமறைவாகியுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டால் உயிர் இழந்து விடுவோமோ என மக்கள் அஞ்சுவதை கண்ட அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தடுப்பூசி போடுபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டுமென மது கடை உரிமையாளர்களிடம் கூறியுள்ளனர். மேலும், தடுப்பூசி போடுவதற்கு வந்த அதிகாரிகள் அருகிலிருந்த மதுக்கடைகளில் மது வாங்குவதற்காக ஏற்கனவே வரிசையில் நின்று கொண்டு இருந்தவர்களிடம் தடுப்பூசி போட்டு விட்டீர்களா என கேட்டுள்ளனர்.

அப்பொழுது பலர் இல்லை என்று பதில் கூறியதால் மது கடை உரிமையாளர்களிடம் இனி தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என கூறிய அதிகாரி, வரிசையில் நின்று கொண்டிருந்த மதுப்பிரியர்களில் தடுப்பூசி போடாதவர்களை அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும் இது விழிப்புணர்வு நடவடிக்கைக்காக தான் செய்யப்பட்டது, அதிகாரபூர்வமாக உத்தரவிடவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மதுக்கடை உரிமையாளர்கள் பலர் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்வோம் என கூறியுள்ளனராம்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube