ஜல்லிக்கட்டு தீர்ப்பு போல, நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டும்; அன்புமணி ராமதாஸ்.!

ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என தீர்ப்பு வந்தது போல, நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழ்நாட்டு இளைஞர்களின் வீர விளையாட்டு என்பதையும் தாண்டி, உள்ளூர் இன காளைகளின் நலனையும், மரபு வழியையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாகும். ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்தது என்ற தமிழ்நாட்டு அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழங்கிய இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது.

ஜல்லிக்கட்டு போட்டிகளின் பண்பாட்டுச் சிறப்பினை, உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட நிலையில், விலங்குகள் நல அமைப்பு என்ற போர்வையில் செயல்படும் எந்த அமைப்பும் இனி இது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு எவ்வாறு அதிகாரம் உண்டோ அதேபோல் நீட் விலக்கு குறித்து சட்டம் இயற்றவும் தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டு.

இதனால் நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என மேலும் வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
Muthu Kumar