செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்?….கிடைத்த நீர் ஆதாரங்கள் – நாசா கண்டுபிடிப்பு..!

செவ்வாய் கிரகத்தில் எரிமலை செயல்பாடுகள்,நீர் ஆதாரம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கடந்த ஆண்டு  பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது.

இதனையடுத்து,கடந்த பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேட்டர் எனப்படும் பகுதியில் தரையிறங்கியது. அப்பகுதியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏரி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.

அதன்பின்னர்,பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை தொடர்ந்து பூமிக்கு அனுப்பி வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செவ்வாயின் பாறைத்துகள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது.

ஆனால்,முதல் முயற்சியே தோல்வியில் முடிவடைந்தது நாசா விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.இருப்பினும் நாசாவின் விடாமுயற்சியின் பலனாக 6 சக்கரங்களை கொண்ட பெர்சவரன்ஸ் ரோவர் கருவி செப்டம்பர் 6 அன்று “மான்டெனியர்” என்று பெயரிடப்பட்ட அதன் முதல் மாதிரியை சேகரித்தது,பிறகு செப்டம்பர் 8 அன்று அதே பாறையில் இருந்து அதன் இரண்டாவது “மான்டாக்னாக்”என்ற மாதிரியை சேகரித்துள்ளது.

விரல் அளவுக்கு தடிமனான,ஆறு சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக கூறப்படும் அந்த பாறை துகள்களை தனது டைட்டானியம் குழாய்க்குள் ரோவர் சேமித்து வைத்துள்ளது. சேகரிக்கப்பட்ட மாதிரிக்கு நாசா பெயரிட்டு ஆய்வுகளை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள படங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. செவ்வாயில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில்,செவ்வாய் கிரகத்தின் பாறை மாதிகள் மூலம் கிடைத்துள்ள முதல்கட்ட தகவலில் செவ்வாயில் எரிமலை செயல்பாடுகள் நீர் ஆதாரம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதால்,அங்கு உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற யூகம் வலுவடைந்துள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,”இந்த பாறைகளைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவை நிலத்தடி நீருடன் தொடர்ச்சியான தொடர்புக்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன.குறிப்பாக பூமியில் உள்ள பழங்கால வாழ்க்கையின் அறிகுறிகளைப் பாதுகாக்க உப்புக்கள் சிறந்த தாதுக்கள் இருப்பதைப் போன்று , செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளுக்கும் பொருந்துகிறது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று நாசா புவியியலாளர் கேட்டி ஸ்டாக் மோர்கன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,2 மாதிரிகள் கிடைத்துள்ள நிலையில் பெர்சவரன்ஸ் கருவி அங்கிருந்து 650 அடி தூரம் நகர்ந்து பாறை மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.