முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு – மாநில தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பு குறைவு என மாநில தேர்தல் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு குறைவு என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேர்தல் ஆணையம் ஒரு முடிவினை மேற்கொண்டுள்ளது. தற்போது தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை சுமார் 67,000 உள்ளது. இதனை 95 ஆயிரம் வரை அதிகரிப்பதற்கான திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதில், ஒரு வாக்குச்சாவடியில் 1000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிப்பதற்கான திட்டம் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்புகள் குறைவு என்றும் கூடுதல் வாக்குச்சாவடிகள் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும், குறைந்தது ஒரு மாதத்தில் இந்த பணி முடிக்கப்பட்டாலும், மற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளதால் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பீகார் சட்டமன்ற தேர்தலை மேற்கோள்கட்டி பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது என்றும் கூறியுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்