#Chandrayaan2 : விண்ணில் பாய்ந்தது சந்திராயன் 2 விண்கலம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோ நிறுவனம் நிலவை ஆய்வு செய்ய கடந்த 2008 -ஆம் ஆண்டு சந்திராயன் விண்கலத்தை அனுப்பியது. வெற்றிகரமாக சந்திராயன் 1 விண்கலம் 312 நாட்கள் ஆய்வு செய்தது.

இதைத்தொடர்ந்து இஸ்ரோ நிறுவனம் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது.இறுதியாக சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது.ஆனால் ராக்கெட் ஏவுவதற்கு தயாராக இருந்தபோது அதில் இருந்த தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நேற்று மாலை இதற்கான கவுண்டவுன் மீண்டும் தொடக்கப்பட்டது.இன்று (ஜூலை 22  ஆம் தேதி) பிற்பகல் 2.43 மணிக்கு  சந்திராயன் 2  விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.

 சந்திராயன் 2 ஒரு பார்வை:

சந்திராயன் 2 விண்கலத்தின் எடை 3850 கிலோ  ஆகும்.இதில் லேண்டர்,ஆர்பிட்டர்,ரோவர் என்ற 3  அதிநவீன சாதனங்கள் உள்ளது.ரோவர் நிலவின் மேற்பகுதியை ஆய்வு செய்யும்.ஆர்பிட்டர் விண்கலத்தின் சுற்றுப்பாதையை மாற்ற உதவி செய்யும்.    நிலவின் இருள் நிறைந்த தென் துருவத்தில் ஆய்வு செய்யும்படியாக, சந்திரயான் 2வின் லேண்டர் கருவி அமைக்கப்பட்டிருக்கிறது.இது மிகப்பெரிய சாதனையாக ஆராய்ச்சி உலகில் பார்க்கப்படுகிறது.

மேலும் இதில் 14 வகையான கருவிகள் உள்ளது.இவை நிலவுக்கு சென்றதும் தனித் தனியே  பிரிந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும்.இந்த விண்கலத்தில் உள்ள முப்பரிமாண கேமராக்கள் தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பும்.சந்திராயன் 2 விண்கலம் 48 நாட்கள் பயணத்திற்கு பின்னர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும்.