பல கோடிகளை மோசடி செய்த கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது …!

பல கோடிகளை மோசடி செய்த கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது.

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.ஸ்வாமிநாதன் சகோதரர்கள். இவர்கள் இருவரும் நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். தங்களிடம் முதலீடு செய்தால் அதனை இரட்டிப்பாக திரும்பி தருவோம் என்று கூறி மக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பலரிடம் நிதி வசூல் செய்துள்ளனர். இவரிடம் செல்வந்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் பலர் பல கோடிகளில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த தம்பதியான ஜபருல்லா மற்றும் பைரோஜ்பானு ஆகியோர் ஹெலிகாப்டர் சகோதரர்கள் தங்களிடம் ரூ.15 கோடி மோசடி செய்து விட்டதாகவும், பணத்தை திரும்பக் கேட்டால்  கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மேலும் அவர்களது சொத்துக்கள் மற்றும் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் இல்லை என்றால் அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விடுவார்கள் என்றும் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

இவர்களது புகாரின் அடிப்படையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மற்றும் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக இருந்த சகோதரர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்ரீகாந்த் என்பவரை கைது செய்தனர். மேலும், ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் இருந்த 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஹெலிகாப்டர் சகோதரர்களின் அக்கா மற்றும் தம்பி ஆகிய  மீரா, ஸ்ரீராம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். இதனை தொடர்ந்து, தற்போது தலைமறைவாகியிருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களான எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.ஸ்வாமிநாதன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.