க்ருனால் பாண்டியா வெளியேறி சம்பவத்தை சுட்டிக்காட்டி இது “ரிட்டயர்டு ஹர்ட்டா” இல்லை “ரிட்டையர்டு அவுட்டா” என அஸ்வின் கேள்வி.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ ஏக்னா மைதானத்தில் மோதியது. இதில், மும்பை அணியை வீழ்த்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இதனிடையே, மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, முதலில் களமிறங்கிய லக்னோ அணி தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர், கேப்டன் க்ருனால் பாண்டியா மற்றும் ஸ்டோனிஸ் ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்து வந்தனர். அப்போது, லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா 16-வது ஓவரில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
ஆடுகளம் சற்று தோய்வாக இருந்ததால் க்ருனால் பாண்டியாவால் ரன்கள் சேர்க்க முடியவில்லை. இதனால், தம் அரைசதம் எடுப்பதை கூட யோசிக்காமல் அணிக்காக மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என முடிவெடுத்து தான் காயம் அடைந்து விட்டதாக கூறி ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
க்ருனால் பாண்டியா 49 ரன்கள் எடுத்திருந்தபோது களத்தை விட்டு (ரிட்டயர்ட் ஹர்ட்) என்ற முறையில் வெளியேறிய நிலையில், அதுகுறித்து நெட்டிசன்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். அதாவது, க்ருனால் பாண்டியாவுக்கு உண்மையிலேயே சோர்வு ஏற்பட்டு விட்டதா அல்லது அணி ரன்களை குவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் வெளியேறினாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் கிரிக்கெட் வீரர்களிடமும் விவாதத்தை எழுப்பியுள்ளது. க்ருனால் பாண்டியா “retired hurt” என்ற முறையில் வெளியேறியது குறித்து கேள்வி கேட்டு விவாதத்தை கிளப்பியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். அவரது ட்விட்டர் பக்கத்தில், க்ருனால் பாண்டியா வெளியேறி சம்பவத்தை சுட்டிக்காட்டி இது “ரிட்டயர்டு ஹர்ட்டா” இல்லை “ரிட்டையர்டு அவுட்டா” என கேள்வி கேட்டுள்ளார்.
களத்தில் ஆட்டமிழக்காமல் தமக்கு காயம் ஏற்பட்டு விட்டது, இதனால், விளையாட முடியவில்லை எனக் கூறி களத்திலிருந்து வெளியேறலாம். கிரிக்கெட்டில், பெரும்பாலும் அனைத்து வீரர்களும் இப்படித்தான் செய்வார்கள். ஆனால், முதல் முறையாக கடந்த ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வின், அதிரடியாக விளையாட முடியவில்லை என்று கூறி மற்ற வீரருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ஆட்டம் இழக்காமலே களத்தில் இருந்து வெளியேறினார்.
தற்போது அஸ்வினுக்கு பிறகு, இந்தாண்டு முதல் முறையாக க்ருனால் பாண்டியாவும் அதையே செய்திருக்கிறார். ஆனால், இவ்வாறு செய்தால் அது ரிட்டயர்டு அவுட் ஆக வழங்க வேண்டும் என அஸ்வின் தற்போது பேசியிருப்பது ரசிகர்களுக்கு ஒருவகை ஏமாற்றமாக தான் உள்ளது. அஸ்வின் கேள்விக்கு, ஒருவர் இது முற்றிலும் ஏமாற்றும் முறையாக உள்ளது என கூறியுள்ளார்.
இதற்கு அஷ்வின் கூறுகையில், அதைச் செய்ய விதிகள் உள்ளது, மோசடி இல்லை என்றுள்ளார். மேலும், உங்களால் ஓட முடியாதபோது களத்தில் இருப்பது அர்த்தமில்லை. எனவே, நல்ல முடிவு என மற்றொருவர் க்ருனால் பாண்டியா முடிவுக்கு வரவேற்பு அளித்துள்ளார். டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் ‘ரிட்டயர்ட் அவுட்’ என்ற முறையை பின்பற்றியிருக்க வேண்டும் என அஷ்வின் கேள்விக்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு விவாதமாகவே மாறியுள்ளது.
Retired out? #LSGvsMI #KrunalPandya
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) May 16, 2023