‘கூ’ செயலியில் கசியும் பயனர்களின் தகவல்கள் ? திடுக் தகவலை வெளியிட்ட ஹேக்கர்

ட்விட்டருக்கு மாற்றாக  இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட  ‘கூ’ செயலியில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட  ட்விட்டர் கணக்குகளை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திடம் வலியுறுத்தியது.ஆனால் இதில் ஒரு சில கணக்குகளை மட்டும் ட்விட்டர் நிறுவனம் நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனம் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

இதனால் ட்விட்டருக்கு மாற்றாக “கூ”  எனப்படும் இந்திய செயலி தொடங்கப்பட்டது.மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ,மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் உள்ளிட்டோர் இந்த செயலியில் இணைந்து பின் தொடருங்கள் என்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து பலரும் இந்த செயலிக்கு மாறி வருகின்றனர். இந்த செயலியை இந்தியர்கள் தான் உருவாக்கி உள்ளதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.ட்விட்டருக்கு மாற்றாக இந்த செயலி இருந்தாலும் இதன் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.அதற்கு முக்கிய காரணம் பிரான்ஸ் நாட்டின் ஹேக்கர் ஒருவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு.அதாவது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ,கூ செயலியில் வெறும் 30 நிமிடங்கள் செலவிட்டதாகவும், பயனர்களைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை கசியவிடுவதைக் கண்டறிந்ததாகவும் கூறியுள்ளார். எலியட் ஆல்டர்சன் என்ற அந்த ஹேக்கர் , மின்னஞ்சல், பிறந்த தேதி, பெயர், திருமண விவரம் , பாலினம் போன்ற பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை “கூ” கசியவிடுவதாக கூறியுள்ளார்.இவர் இவ்வாறு கூறியது “கூ ” பயனர்கள் இடையே சற்று பீதியை ஏற்படுத்தியுள்ளது.

.