“கோடநாடு கொலை;ராஜேஸ்குமார் நாவலை விட மர்மமாக உள்ளது” – காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை..!

கோடநாடு கொலை,கொள்ளை சம்வபம் ராஜேஸ்குமார் நாவலை விட மர்மமாக உள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

காங்ரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கோடநாடு விவகாரம் குறித்து,இன்று சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக்கொள்ள கூறி சபாநாயகரிடம் மனு அளித்தார்.

அதன்பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கூறியதாவது:

“கோடநாடு எஸ்டேட்டில் இருந்த ஓம் பகதூரை கொலை செய்தார்கள்,கிருஷ்ணா பகதூர் படுகாயத்துடன் தப்பித்து செல்கிறார்.அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ்குமார் மர்மமான முறையிலே தற்கொலை செய்து கொள்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நம்பிக்கையான ஓட்டுனராக இருந்த கனகராஜ் மர்மமான முறையிலே இறக்கிறார்.சயன் அவர்கள் குடும்பத்துடன் செல்கையில் அவரது மனைவியும்,குழந்தையும் இறக்கிறார்கள்,காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத சயனை யாரோ ஒருவர் காரிலே மோதுகிறார்.

இப்படிப்பட்ட ராஜேஸ்குமார் நாவலை விட மர்மமான இந்த தொடர்கதை தொடர்ந்து கொண்டுருக்கிறது.நான் கேட்கிறேன் நீங்கள் தெய்வமாக வணங்கக்கூடிய இந்த கோடநாடு எஸ்டேட்டில் நடந்த சம்பவங்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்கள் ஒரு நிமிடம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஏனெனில்,தினேஷ்குமார் என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.இது குறித்து அவரது தந்தை கூறுகையில்,”கடவுள் கொடுத்தார்,கடவுள் எடுத்தார்,கடவுள் பார்த்துக்கொள்வார் என்று,மேலும்,அவரது தங்கை கூறுகையில்,எந்த லுங்கியில் எனது அண்ணன் தூக்கு போட்டுக்கொண்டாரோ?அது,என் அண்ணன் உடையது இல்லை,அப்பாவுடையது இல்லை,அந்த லுங்கி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்று கடந்த ஆட்சியில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளிக்க முடியாதவர்கள்,எதற்காக என்னிடம் பதில் சொல்கிறார்கள்.ஏன் சயன்,மனோஜ் அவர்கள் 90 நாட்களில் பிணையில் வந்தார்கள்.ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை?,இதை நான் கேட்கவில்லை அதிமுக தொண்டர்கள் நேற்று முன்தினம் இருந்து தொலைபேசியில் என்னிடம்,”எங்கள் அம்மாவிற்கு நீதி கிடைப்பதற்கு நீங்களாவது  சட்டப்பேரவையில் குரல் கொடுங்கள்”, என்று கூறினார்கள்.

எனவே,நான் கேட்கிறேன் “90 நாட்களில் பிணையில் சயனும்,மனோஜும் எதற்காக புதுடெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள்.எதற்காக மாத்தியூ அதனை ஆவண படமாக எடுத்தார்.எதற்காக தமிழக காவல்துறை புதுடெல்லி விரைந்து,அவர்களை கைது செய்தது? என்பதற்கெல்லாம் பதில் அளிக்காமல்,நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை விதி எண் 55 கீழ் கொடுக்கிறோம்.இதை விவாதிக்கணும் அல்லது விவாதிக்க முடியாது என்று கூறவேண்டும்.

மேலும்,சட்டப் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதிக்க தயார் என்று அதிமுகவினர் சொல்லவேண்டியது தானே? மாறாக பட்டினப்பாக்கத்தில் காலை செய்தியாளர்களை சந்தித்து,தேவையில்லாத கருத்துக்களை கூறியதற்கு என்ன காரணம்..உண்மை ஒருநாள் வெளியில் வரும்,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆத்மா இருக்கிறது என்றால்,என்ன நடந்தது என்ற உண்மைகளை வெளியில் கொண்டுவருவார்.

மேலும்,அவரை நேசிக்கும் அதிமுக தொண்டர்கள் இந்த உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால்,அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அஞ்சுகிறார்கள்.இந்த ஆட்சி கண்டிப்பாக அவரது மறைவு குறித்த உண்மையை வெளிக்கொண்டுவரும்”,என்று தெரிவித்தார்.