பொதுவாகவே சமையலறையில், காய்கறிகள், பழங்கள் என நான் பயன்படுத்திய பின் அதன் கழிவுகளை தூக்கி வீசும் பழக்கம் நம்மிடம் உண்டு. ஆனால், சமையலறையில் இருந்து தூக்கி வீசப்படும் பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கு நல்லது.
இது காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் கழிவுகளைக் குறைக்க உதவுகிறது. இது பணத்தை சேமிக்கவும் உதவுகிறது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில், நாம் தூக்கி வீசக்கூடிய சில பொருட்களை மீண்டும் எப்படி உபயோகப்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.
காய்கறி மற்றும் பழ கழிவுகளை உரமாக்கும் முறை
நமது வீடுகளில் காணப்படும் காய்கறி மற்றும் பழ கழிவுகளை சேமித்து வைத்து, அதனை ஒரு பக்கெட்டில் சிறிதளவு போட்டு, அதற்கு மேல் செம்மண் போட வேண்டும். அதே போல் மீண்டும் சிறிதளவு காய்கறி கழிவை போட்டு அதன்மேல் செம்மண்ணை போட வேண்டும். இப்படி அடுக்கடுக்காக போட்டு பக்கெட்டை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
எதற்காக செம்மண் போடப்படுகிறது என்றால், நாட்கள் ஆக ஆக இந்த கழிவுகளில் இருந்து நீர் வடியும். அதனை இந்த மண் உறிஞ்சி கொள்ளும். இந்த கழிவுகளில் இருந்து மரம், செடி, கொடிகளுக்கு தேவையான 16 வகையான சத்துக்கள் கிடைக்கிறது.
எனவே நாம் இனிமேல் செடிகளுக்கு கெமிக்கல் கலந்த உரங்களை பயன்படுதத்தாமல், நமது வீடுகளில் மீதமாகும் காய்கறி மற்றும் பழ கழிவுகளை இவ்வாறு உரமாக்கி பயன்டுத்தலாம். இது நமது செடிகள் செழிப்பாக வளர வழிவகுக்கும்.