தேசிய கீதத்தை பாடி போராட்டத்தை கலைத்த கர்நாடக காவல்துறை.!

சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்- தேசிய கீதத்தை பாடி போராட்டத்தை கலைத்த காவல்துறை.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல முடியாமல் சிக்கி தவித்தனர். இந்த நிலையில், 3 ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் தொழிளாலார்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு அனுமதித்தது. 

இதனிடையே ஊரடங்கு தளர்வால் தற்போது தொழிற்சாலைகள், கட்டிடப் பணிகளை தொடரவும் கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த பணிகளில் பெரும்பாலானோர் வெளிமாநில தொழிலாளர்கள் தான் ஈடுபட்டு வந்தனர். இதனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினால் மாநில பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும் பின்னடைவை சந்திக்கும் என்று கர்நாடக அரசு கருதியது. இதன் காரணமாக தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்த ரயில்களை இயக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. 

இதன் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் பெங்களூருவில் தாங்கள் தங்கியிருந்த இடங்களில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதுபோல் பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே உள்ள தொழிற்பேட்டையில் பீகாரை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமாதானம் படுத்தினர். பின்னர் சில தொழிலாளர்கள் எங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்கள் என கோஷங்களை எழுப்பி, தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. 

இதனை கட்டுப்படுத்த இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா, போலீஸ் வாகன ஒலிபெருக்கி மூலம் தேசிய கீதத்தை பாடினார். உடனே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் தேசிய கீதம் பாடி முடிக்கும் வரை அசையாமல் அதே இடத்தில் நின்றனர். பின்னர் இதுகுறித்து ஆட்சியருடன் கலந்து பேசி விரைவில் உரிய முடிவு எடுப்பதாக தெரிவித்து, தொழிலாளர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்