விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறிய விவகாரம்.. நடிகை கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு!

வேளாண் சட்ட மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என விமர்சித்த கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய துமகுரு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தும் மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை சமீபத்தில் நிறைவேற்றியது.

இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இதனை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கொண்டே வருகின்றனர். மேலும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் வேளாண் மசோதாக்களை திரும்பபெறக்கோரி ட்ராக்டர் பேரணி நடத்தினார்.

இந்தநிலையில், பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், தனது ட்விட்டர் பக்கத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை “பயங்கரவாதிகள்” என விமர்சித்துள்ளார். அந்த பதிவில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தவறான தகவலை பரப்பி கலவரத்தை ஏற்படுத்திய நபர்கள், தற்போது வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டு தேசத்தில் பயங்கரவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றதாகவும், அவர்கள் பயங்கரவாதிகள் என தெரிவித்துள்ளார்.

கங்கனாவின் இந்த பதிவிற்கு எதிர்ப்புகள் கிளம்ப, கர்நாடக மாநிலம், துமகுரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.