கொரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையளிக்கிறது – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

கொரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையளிக்கிறது – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

கொரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து 6வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. காலையில் நடைபெற்ற மாநிலங்களவையில் வங்கி திவால் சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மார்ச் 25-ஆம் தேதிக்கு முன்பு வரை கடன் வாங்கி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார். இதனையடுத்து வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

இதையடுத்து, மதுரை எம்பி வெங்கடேசன், கொரோனா சிகிச்சையில் தமிழகத்தில் கபசுரக்குடி நீர் உள்ளிட்ட சித்த மருத்துவம் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுகுறித்து மத்திய ஆயுஷ் துறை எந்த மாதிரியான ஆய்வை மேற்கொண்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்ஷவர்தன், கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தின் கபசுர குடிநீர் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது நன்கு தெரியும்.

தமிழகத்தில் இதுவரை 120 மெட்ரிக் டன் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் சித்த மருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது என ஆயுஷ்துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும், கொரோனா சிகிச்சையில் கபசுரக்குடிநீர் நம்பிக்கை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தொற்றுநோய் திருத்த மசோதாவை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube