கன்னியாகுமரி இடைத்தேர்தல்.., மீண்டும் பொன். ராதாகிருஷ்ணன் தோல்வி..!

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.

எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானது. இந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய்வசந்த் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் 5,76,037 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 4,38,087 பெற்றார். இதையடுத்து 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் இதுவரை பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே போட்டியிட்டுள்ளார். இதில் 7 முறை போட்டியிட்டு 2 முறை வெற்றியும், 5 முறை தோல்வியை தழுவி இருந்தார்.

இதைதொடர்ந்து, 8-வது முறையாக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் இந்த முறையும் தோல்வியை தழுவினார். இதனால், 6 முறையாக பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியை தழுவியுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமாரிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan